வெள்ளை சட்டை அணிந்து வந்தால்தான் மரியாதை தருவீர்களா? - ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்

அரசு அலுவலகம் அனைத்து மக்களுக்குமானது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவர் புகார் அளித்தார். அவரை அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர்களில் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் சாதி ரீதியிலான கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளிக்க நொளம்பூர் காவல் நிலையத்துக்கு சென்றபோது தன்னை அவமானப்படுத்திய காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானமாமலை தேசிய பட்டியலின ஆணையத்துக்கு மனு அனுப்பினார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தேசிய பட்டியலின ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் வானமாமலை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், "காவல் ஆய்வாளர் முன்பு அமர்வதற்கு புகார்தாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெள்ளை சட்டையுடன் வந்தால்தான் சிவப்பு கம்பள வரவேற்பு தருவீர்களா? அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்கமாட்டீர்களா? அவர்கள் வாக்களித்தால் அந்த வாக்கை எண்ண மாட்டீர்களா? மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, நீங்கள் சொல்பவர்தான் இருக்கையில் அமர வேண்டுமா? மற்றவர்கள் அமரக்கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? அரசு அலுவலகம் அனைத்து மக்களுக்குமானது" என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

அப்போது காவல்துறை தரப்பில், "சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com