

சென்னை,
குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தியை, மின் வாரியம் நிறுத்தியதால், 11 லட்சம் யூனிட் மின்சாரம் வீணானதாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-
மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்துக்கு முன்னுரிமை அளிக்க மத்திய, மாநில சட்டங்கள் வழிவகை செய்கின்றன. மின் தேவை குறைந்து, உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், முதலில் அனல் மற்றும் எரிவாயு மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த வேண்டும். கடைசியாகத்தான் காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும்.
ஆனால், இதற்கு மாறாக மின் வாரியம் காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தியை முதலில் நிறுத்திவிட்டு, அதிக விலைக்கு வாங்கிய அனல் மற்றும் எரிவாயு மின்சாரத்தைப் பயன்படுத்தியது ஏற்புடையதல்ல. இதனால், 8.60 லட்சம் யூனிட் சூரியசக்தி மின்சாரமும், 2.40 லட்சம் யூனிட் காற்றாலை மின்சாரமும் என மொத்தம் 11 லட்சம் யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மின் தேவை திடீரென குறைந்ததால், மின் வழித்தடங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில நிமிடங்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்துக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.