திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
 திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மதுரை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை உத்தங்குடியில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் தென்மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் திமுக வாக்குசாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

சித்திரை திருவிழாவைப்போல் இங்கு கூடியுள்ள திமுகவினரை பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது. பாசம் என்றாலும், கோவில் என்றாலும், சாப்பாடு என்றாலும், வீரம் என்றாலும் மதுரைதான்.

இந்த கூட்டத்தை பார்க்கும்போது எனது நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனி நாமதான். இனி எப்போதுமே நாமதான். இந்த நம்பிக்கைக்கு காரணம் நீங்கள்தான்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், அது தமிழகத்தில் தடுக்கப்பட்டது. அதற்கு காரணம் நிர்வாகிகளாகிய நீங்கள் தான். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கும் தேர்தலுக்கும் பெரிய இடைவெளி இல்லை.

அடுத்து மேற்கு மண்டல மாநாடு 27-ந் தேதி கோவையில் நடக்கிறது. கடந்த 2 மாதத்தில் 7 மாநாடுகள் நடத்தி 9 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகளை சந்தித்து பேசியிருக்கிறேன்.

இப்படி நம்மைப்போல் தேர்தலுக்கு தயாராகும் கட்சி இந்தியாவிலேயே இல்லை. மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., நம் இயக்கத்தை சீண்டி பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும். எதிர்க்கட்சிகளே அஞ்சி நடுங்குகிறது.

இப்போது நாம் காட்டுவது டிரைலர்தான். திருச்சியில் மெயின் பிச்சர் காட்டப்போறோம். அடுத்த மாதம் 30-ந் தேதி திருச்சியில் 10 லட்சம் பேர் கூடப்போகிறோம். நம்முடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.

எங்கு திரும்பினாலும் கருப்பு, சிவப்புதான் தெரியுது. இதுதான் கள நிலவரம். தெற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெற வேண்டும்.

2019-ம் ஆண்டு முதல் நமது கூட்டணிக்கு வெற்றி மேல் வெற்றிதான். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான வெற்றி பெற்றோம்.

அப்போது இருந்ததைவிட அதிக திட்டங்களை கொடுத்துள்ளோம். கேட்காததையையும் கொடுத்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளோம். நீங்கள் இருக்கும்போது எனக்கு பயமில்லை. தனிப்பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைப்போம்.

இந்த தேர்தலில் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. இலக்கை அடைய உதவுங்கள். 200 தொகுதிகள் நிச்சயம். அதற்கு மேல் வெற்றி பெறுவது நமது லட்சியம்.

ஒவ்வொரு வாக்காளரையும் 5 முறையாவது நீங்கள் சந்திக்க வேண்டும். அடுத்த 2 மாதம் உங்களுக்கு ஓய்வே கிடையாது. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

திமுகவுக்கு வாக்களிக்கின்ற குடும்பமாக இருந்தாலும் சரி, வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி அவர்களை சந்தித்து நமது சாதனைகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். வாக்காளர்கள் பூத்துக்கு வந்து ஓட்டு போடும் வரை அவர்களுடன் இருக்க வேண்டும்.

75 ஆண்டு காலம் திமுக வலிமையாக இருக்க என்ன காரணம். மக்களிடம் வாக்குகளை பெறுவதுடன் நமது பணி முடிந்தா. வாக்கு எந்திரங்களை சீல் வைத்து எடுத்து சென்று, வாக்குகளை எண்ணிச் சொல்லும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைத்தனர். அதை முறியடித்து ரூ.5 ஆயிரம் வழங்கினோம். பொங்கல் தொகையுடன் சேர்த்து ரூ.8 ஆயிரம் வழங்கியுள்ளோம்.

இங்கு எல்லாருக்குமான வளர்ச்சி எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. இந்த ஆட்சி தொடர்ந்தால்தான், மகளிர் உதவிதொகை தொடரும், நலத்திட்டங்கள் தொடரும். இதை மக்களிடம் சொல்லுங்கள்.

அன்றைக்கு ரூ.5 ஆயிரம் போட்டவுடன், மக்கள் வங்கிகளுக்கு பணத்தை எடுக்க சென்றனர். மத்திய அரசு எங்கே அந்த பணத்தை எடுத்துவிடுமோ என்று நினைத்துதான் அவ்வாறு செய்தனர். மக்களுக்கு கொடுப்பது திமுக அரசு, அதை எடுக்க நினைப்பது மத்திய பாஜக அரசு.

தமிழகத்தில் மக்கள் இலவச பஸ் பயணம் செய்வதால், மெட்ரோ ரெயிலில் பாதிப்பு ஏற்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார். மதுரைக்கு எப்போது மெட்ரோ வரும் என்று இங்கு பிரதமர் மோடி வரும்போது கேட்க வேண்டும்.

பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமியால் கோரிக்கை வைக்க முடியவில்லை. மத்திய அரசை எதிர்த்தால் நம்மீது வழக்கு போடுவார்களா, போடுங்கள். நாங்கள் பார்க்காத மிசாவா?, தடவா?.

நம்முடைய திட்டங்களில் ஏதாவது ஒன்று மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. நாம் 11. வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம். நமது ஆட்சியில் சாதனைகள் இல்லாத நாளே இல்லை. உங்கள் பகுதியில் செய்த சாதனைகளை தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். அதை மக்களிடம் சொல்லுங்கள்.

தேர்தல் பணியில் நாம்தான் முதலிடம். கூட்டணியில், தொகுதி பங்கீடு என அனைத்திலும் முதலிடம். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற கேள்வியை மக்களிடம் எழுப்புங்கள். தமிழ்நாடு அணி ஜெயிக்க வேண்டும் என்றால் திமுக ஜெயிக்கனும். எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க வேண்டும்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர வெல்வோம் ஒன்றாக. பாசிச பாஜக, அடிமை அதிமுகவை விரட்ட வெல்வோம் ஒன்றாக.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com