கணவருக்கு தெரியாமல் ரூ.4 லட்சம் கடன்.. நகைக்கடையில் கத்தியை காட்டி வசமாய் சிக்கிய பெண் - பரபரப்பு வாக்குமூலம்


கணவருக்கு தெரியாமல் ரூ.4 லட்சம் கடன்.. நகைக்கடையில் கத்தியை காட்டி வசமாய் சிக்கிய பெண் - பரபரப்பு வாக்குமூலம்
x

பர்தா அணிந்தபடி அந்த பெண் நகைக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றார்.

சென்னை


சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தேவராஜ் (வயது 65) என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், நகை வாங்குவதுபோல போக்குகாட்டி 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் வளையல், ஒரு பவுன் கம்மல் என 5 பவுன் நகைகளை வாங்குவது போல் பார்த்து உள்ளார்.

பின்னர் நகைகளை வாங்குவதற்கு தேவராஜ் பணம் கேட்டபோது, தனது கணவர் பணத்தை எடுத்து வருவதாக கூறி அந்த பெண் கடையில் வெகு நேரமாக காத்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தேவராஜ், மதிய உணவுக்கு செல்வதாகவும், கடையை மூடப்போவதாகவும் கூறினார். உடனே அந்த பெண், சட்டென்று தனது கையில் வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து தேவராஜை மிரட்டினார். சுதாரித்துக்கொண்ட தேவராஜ், தற்செயலாக அங்கு வந்த தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றார்.

அப்போது அந்த பெண், அவர்களிடம் இருந்து தப்பிக்க பையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து தூவி தப்பிச்செல்ல முயன்றார். அதற்குள் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு சாலையோர வியாபாரிகள் ஓடிவந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜெயசித்ரா (வயது 44) என்பதும், திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

போலீசாரிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலம் வருமாறு;-

என் பெயர் ஜெயசித்ரா. நான், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்ட்டன்ட்டாக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன். எனது கணவர் ராஜேஷ் (47) சிவில் என்ஜினீயர். வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். நான், என் கணவருக்கு தெரியாமல் பலரிடம் ரூ.4 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி, ஆடம்பரமாக செலவு செய்து வந்தேன்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. கடன் பிரச்சினையில் இருந்து மீள, சமூக வலைத்தளங்களில் எப்படி திருடுவது என்று பார்த்தேன்?. அதைப்பார்த்து பர்தா அணிந்து கொண்டு மிளகாய் பொடி, கத்தியுடன் சென்று மதிய நேரம் தனியாக இருந்த தேவராஜ் கடையில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விடலாம் என்று நினைத்து சென்றேன். அதற்குள் என்னை மடக்கி பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான ஜெயசித்ரா சொல்வது உண்மையா? அல்லது அவர் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story