‘யூடியூப்’ பார்த்து பங்கு சந்தையில் முதலீடு.. லட்சங்களை இழந்த பெண்.. அடுத்து நடந்த கொடூரம்

கடனை கேட்டு அந்த பெண்ணிடம் தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
‘யூடியூப்’ பார்த்து பங்கு சந்தையில் முதலீடு.. லட்சங்களை இழந்த பெண்.. அடுத்து நடந்த கொடூரம்
Published on

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணிநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அருண் (வயது 44). இவர் தனது மனைவி வனஜா (38) மற்றும் மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான அருண், பெயிண்டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

வனஜா, யூடியூப் பார்த்து ஆன்லைனில் பங்கு சந்தையில் சிறிய அளவில் முதலீடு செய்தார். அதில் இரட்டிப்பு மடங்கு பங்கு உயர்ந்து வருமானம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என எண்ணிய வனஜா, தனது கணவருக்கு தெரியாமல் கடன் செயலி மூலம் ரூ.2.5 லட்சம் கடன் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்.

ஆனால் அதில் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் இழந்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் கடனை கேட்டு தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த வனஜா, தனது வீட்டில் யாரும் இ்ல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார், வனஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தற்கொலை செய்த வனஜாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தற்கொலைக்கு முன்னதாக அவர், பதிவு செய்து வைத்திருந்த 3 ஆடியோக்கள் இருந்தது. அதில் ஒரு ஆடியோவில், நான் தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி தனது கணவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com