

ஈரோடு,
நர்சு போல் வந்து மயக்க ஊசி செலுத்தி மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே வசிப்பவர் வள்ளியம்மாள் (70 வயது). கூலித்தொழிலாளி. தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுடிதார் அணிந்த ஒரு பெண், நர்சுகள் அணியும் கோட்டு போட்டபடி வள்ளியம்மாளின் வீட்டுக்கு வந்தார்.
வாசலில் அமர்ந்திருந்த வள்ளியம்மாளிடம், 'நான் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து பயிற்சி பணிக்காக வந்திருக்கிறேன். உங்களுக்கு ரத்த அழுத்தம் (பிரஷர்) பார்க்கவேண்டும் என்று கூறி வள்ளியம்மாளுக்கு ரத்த அழுத்தம் பார்த்தார். பின்னர் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ஊசி போடவேண்டும்' என்று கூறி வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
வீட்டுக்குள் யாருமில்லாத நிலையில் வள்ளியம்மாளை கட்டிலில் படுக்கவைத்து அவருக்கு நரம்பில் ஊசி செலுத்தி உள்ளார். ஊசி போட்ட நில நிமிடங்களில் வள்ளியம்மாளுக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 20 நிமிடம் ஆனதும் மயக்கம் தெளிந்து, வள்ளிம்மாள் கண்விழித்து பார்த்தார்.
அப்போது தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி காணாததை கண்டு திடுக்கிட்டார். அப்போதுதான் நர்சுபோல் வந்த பெண் தனக்கு மயக்க ஊசி செலுத்தி நகை பறித்து சென்றதை உணர்ந்துகொண்டார். உடனே கண்ணீருடன் அக்கம் பக்கத்தினரிடம் நடந்த விவரத்தை கூறினார்.
இதுகுறித்து உடனடியாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வள்ளியம்மாளிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். அக்கம் பக்கத்திலும் விசாரணை நடத்தினர். அப்போது வள்ளியம்மாளிடம் நகை பறித்து சென்ற அந்த பெண், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று முதியவர்களுக்கு ரத்த அழுத்தம் பார்த்ததும், அப்போதுதான் வள்ளியம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை கண்டுகொண்டு அவருக்கு மயக்க ஊசி செலுத்தி நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அந்த பெண் கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவில் அருகே காரில் வந்து இறங்குவதும், சிறிது நேரத்தில் காரில் ஏறிச்செல்வதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நர்சுபோல் நடித்து நகை பறித்து சென்ற மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.