

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் விடியல் பயண திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண நகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வசதி இருந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, இந்த திட்டத்தின் பெயரை வெற்றிப் பயணத் திட்டம் என்று மாற்றியதுடன், சாதாரண நகர பஸ்களையும் தாண்டி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தி நாளான நாளை (அக்.2) பெண்களுக்கான வெற்றிப் பயண திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்க இருக்கிறார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இந்த திட்டத்தை அவர் தொடங்கிவைப்பார் என்று தெரிகிறது. வெற்றிப் பயணத் திட்டத்தின் மூலம் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களில் பெண்கள் பயணிக்கலாம் என்றாலும், எவ்வளவு தூரம் செல்ல முடியும்?, சென்னையில் இருந்து ஒருவர் நாகர்கோவிலுக்கோ, அல்லது கோவைக்கோ செல்ல முடியுமா?, அவ்வாறு செல்ல வேண்டும் என்றால், எத்தனை பஸ்கள் மாற வேண்டும்? என்ற கேள்விகள் பெண்களையும் தாண்டி அனைவரது மனதிலும் எழுகிறது.
பொதுவாக, தமிழகத்தில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் 30 முதல் 100 கி.மீ. வரையும், எல்.எஸ்.எஸ். பஸ்கள் 30 முதல் 40 கி.மீ. வரையும், டீலக்ஸ் பஸ்கள் 30 முதல் 50 கி.மீ. வரையும் இயக்கப்பட்டு வருகிறது. இதைவைத்து பார்க்கும்போது அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள்தான் நீண்ட தூரம் செல்கின்றன. அதை வைத்து கணக்கிடும்போது, சென்னையில் இருந்து பெண் ஒருவர் எக்ஸ்பிரஸ் பஸ்களில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி என மாறி.. மாறி.. இலவசமாக நீண்ட தூரம் செல்ல முடியும்.
அதேபோல், திருச்சி - திண்டுக்கல், தஞ்சாவூர்- நாகப்பட்டினம், தஞ்சாவூர் - வேளாங்கண்ணி, திண்டிவனம் - விழுப்புரம், விருத்தாசலம் - திருச்சி, கோவை - பழனி, பழனி - திண்டுக்கல், கோவை - ஈரோடு, ஈரோடு - சேலம், மதுரை - விருதுநகர், விருதுநகர் - கோவில்பட்டி, திருநெல்வேலி - நாகர்கோவில் என அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்ல முடியும். திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கலாம்.
வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 12,692 அரசு பஸ்களில் (எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ்) பெண்களும், திருநங்கைகளும் முற்றிலும் இலவசமாக பயணிக்க முடியும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 84 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரு வழிப் பயணங்கள் மேற்கொள்ள வழிவகுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.