

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரம், குறிஞ்சி நகரில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அரசு அமைந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. ஆனால், அதன் பின்னர் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்னதாக தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் டாஸ்மாக் கடை அமைக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் சப்-கலெக்டர் தலையீட்டால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது குறிஞ்சிநகர் பகுதியில் புதிய தனியார் பாருடன்கூடிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், 14-வது வார்டு கவுன்சிலரும், மாநகர தி.மு.க. துணை செயலாளருமான கீதா முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு வந்து, திறக்கப்படவுள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.