

சென்னை,
தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகையை வரவு வைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை தொடங்கப்பட்டது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகையானது ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
எனவே, அதற்கு முன்னதாக மகளிர் உரிமைத்தொகையை வழங்கினால், தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக இருக்கும் என்று தமிழக அரசு கருதுகிறது. மாதத்தின் முதல் நாள் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, முதல் வாரத்தில் மகளிர் உரிமைத்தொகையையும் வழங்கிவிடலாம் என்று அரசு நினைக்கிறது. அதற்குள் தேவையான நிதியும் அரசு கருவூலத்திற்கு வந்துவிடுமா? என்றும் அரசு கணக்கிட்டு வருகிறது. தற்போது, பரிசீலனையில் இது இருந்தாலும், அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.