

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் அண்ணா நகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட சிட்கோ நகர் வில்லிவாக்கம் ஏரியில், சிறப்பு திட்டங்கள் துறை சார்பில், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை இன்று (14.06.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா நகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட சிட்கோ நகர் வில்லிவாக்கம் ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் மட்டத்தினை பல்வேறு வகைகளில் அதிகரிக்கவும், கோவில் குளங்களை புரணமைக்கவும், நீடித்த நிலையான நீர் பாதுகாப்பு திட்டமாக உருவாக்குவதற்கு சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தினால், பூங்காக்களுடன் கூடிய நீர்நிலையை இந்த ஏரியில் அமைக்க 27.5 ஏக்கர் நிலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கியது.
இதில் முதற்கட்டமாக, வில்லிவாக்கம் ஏரியில் தூர்வாருதல், ஏரியின் கொள்ளளவினை 20,000 கன மீட்டரிலிருந்து 2,90,000 கனமீட்டராக அதிகரித்தல், ஏரிக்கு கரைகள் அமைத்தல், இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல், நிர்வாக கட்டிடம், மழைகாலத்தில் ஏரிக்கு மழைநீர் செல்ல மழைநீர் வடிகால் பணி, ஆகிய முக்கியமான சுற்றுச்சூழல் மீட்பு பணிகளும், ஏரியினை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணி, ஏரியின் குறுக்கே பொழுதுபோக்குக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கண்ணாடி தொங்கும் பாலம் உள்ளீட்ட பணிகள் ரூ.7.44 கோடி மதிப்பீட்டிலும், மேலும் ஏரியினை சுற்றி வேலி அமைக்கும் பணி, ஏரி மற்றும் தொங்கும் பாலத்திற்கு மின் ஒளி தரும் வகையில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தும் பணி, ஆகியவைகள் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் ரூ.45.00 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இரண்டாம் கட்டமாக தனியார் கூட்டு பங்களிப்பு Public-Private Partnership (PPP) திட்டத்தின் கீழ், 25 வருடங்கள் பராமரித்து இதில் வண்ண இசை நீறுற்று, படகு குழுமம், பலதரப்பட்ட வகையிலான புல்வெளி பாதை, மீன்பிடி துறைகள், சிறுவர் செல்லும் தொடர் வண்டி, நீர்நிலையில் சறுக்கு விளையாட்டு, பறவைகள் பூங்கா, மீன்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், உணவகங்கள், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், சறுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் திறந்த வெளி, 4டி, 5டி திரையரங்கங்கள் மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக அமைக்கும், பணிகளின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தனியார் கூட்டு பங்களிப்பு (PPP) திட்டத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வருடத்திற்கு சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரியினை பராமரிக்கும் பணிக்களுக்கான செலவுகளும், மேற்கண்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட இருப்பதால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இதன் மூலம் ஏற்படும் பராமரிப்பு செலவு சேமிப்புப்பாக இருக்கும்.
மேலும், இப்பகுதியிலே தேசிய பசுமை தீர்பாயத்தின் (NGT) அறிவுறுத்தலின்படி, 8.50 ஏக்கர் பரப்பளவில் சுமார் 60,000 கன மீட்டர் நீர் கொள்ளளவு தேக்கி வைக்கும் வகையில் கூடுதலாக ஒரு குளம் அமைக்க ரூபாய் 7.90 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஏரியில் 900 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் குளத்தினை சுற்றி நடைபாதை அமைத்தல். 11400 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமையாக பராமரிக்க புல் தரைகள், மரங்கள், செடிகொடிகள் மற்றும் பூங்காக்களுடன் கூடிய நீர் நிலையை உருவாக்குதல், 1300 சதுர மீட்டர் பரப்பளவில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கும் பணி, 700 மீட்டர் நீளத்தில் 2 மீட்டர் உயரத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் பணி, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறைகள் அமைத்தல், நிலத்தடிநீர் வெளியேறுவதை தவிர்க்க இரண்டு குளங்களையும் இனைக்க பைப்வசதிகள், ஏரியின் கரையை சுற்றி இரும்பு கிரில்
அமைக்கும் பணி, நடைபாதையை சுற்றி மின்விளக்குகள் அமைக்கும் பணி, ஏரியின் கரையை சுற்றிலும் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையில் Geo Textile மற்றும் Geo Grid மூலம் மேம்படுத்தும் பணி, 8.50 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் குளத்தின் பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இப்பகுதியில் சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாக 5 மில்லியன் லிட்டர் சுத்தமான நீர் பெறப்பட்டு, கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் குளம் மூலம் அருகில் உள்ள பெரிய குளத்திற்கு குழாய் வழியாக நீர் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் இந்த இரண்டு குளங்களும் நீர் வற்றாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது, மேற்பார்வைப் பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) சுந்தரராஜன், மண்டல அலுவலர் இனியன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.