கன்னியாகுமரியில் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுநாள் வரை சுமார் 2.50 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: கலெக்டர் ஆய்வு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு பகுதி வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 15.3.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி(229), நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி(230), குளச்சல் சட்டமன்ற தொகுதி(231), பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி(232), விளவங்கோடு சட்டமன்ற தொகுதி(233), கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி(234) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக 23.4.2026 அன்று நடத்தப்பட உள்ளது.

இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 15 லட்சத்து 20 ஆயிரத்து 338 வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாக்காளர் தகவல் சீட்டை அந்தந்த வீடுகளில் உள்ள யாரேனும் ஒருவர் தங்கள் வீட்டின் உறுப்பினர்களின் வாக்காளர் தகவல் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

வாக்காளர் தகவல் சீட்டினை பெறும் போது, அனைத்து உறுப்பினர்களின் தகவல்சீட்டும் உள்ளதா என அதனை சரிபார்த்து, விடுதலின்றி பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில் மாநிலம், சட்டமன்ற தொகுதி, பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டைஎண், தந்தை பெயர், பாகம் பெயர், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி மையம் பெயர், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் இணையதளம், கட்டணமில்லா தேர்தல் தொலைபேசி எண், மாவட்ட தேர்தல் அலுவலர் விவரம் மற்றும் உதவி எண் உள்ளிட்டவைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இடம்பெற்றிருக்கும்.

இடதுபக்கத்தில் கியூ ஆர் கோடு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் தேர்தல் வாக்குப்பதிவு நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கியூர் கோட்டினை ECINET APP-ல் Search your name in Voter list - search by Bar/QR code இதனை கிளிக் செய்யும் போது தங்களது பெயர், வயது, சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி மையத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் தங்களுக்கு இந்த வாக்காளர் தகவல் சீட்டினை கொண்டு, வாக்குப்பதிவு செய்ய இயலாது.

மேலும் வாக்காளர் தகவல்சீட்டுடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எடுத்துசெல்ல வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களான ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தால் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஆவணத்தை கண்டிப்பாக எடுத்துசெல்ல வேண்டும்.

அதன்ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டணி பகுதி வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருவதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 13.4.2026 அன்று முதல் வாக்காளர் தகவல் சீட்டினை வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகிறார்கள். இதுநாள் வரை சுமார் 2.50 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியானது இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வாக்காள பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் உங்களை நாடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழுஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் வரும் 23.4.2026 அன்று அனைவரும் தங்கள் வாக்குசாவடிக்கு தவறாமல் சென்று தங்கள் ஜனநாயக கடமையின் நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com