ஏலகிரி மலையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

ஏலகிரி மலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
ஏலகிரி மலையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. திருப்பத்தூரில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 கி.மீ. தூரத்திலும், பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தூரத்திலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் அமைந்துள்ளது.

ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ. ஆகும். இங்கு இயற்கைப்பூங்கா, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் கோவில், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும். எப்பொழுதும் ஒரே சீதோஷ்ண நிலை இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

ஏலகிரி மலைக்கு பொன்னேரி அடிவாரத்தில் இருந்து செல்ல வேண்டும். இந்த பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. மழைக்காலங்களில் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் ராட்சத பாறைகள், மண்சரிவுகள் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படும். இதனால் ஏலகிரி மலைக்கு வேறு ஒரு மாற்றுப்பாதையை உருவாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஏலகிரி மலையில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார். இதனை தொடர்ந்து ரோப் கார் வசதி சாத்தியமா? என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

அதாவது, ஏலகிரி மலை அடிவாரம் பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக மேல்பகுதி வரை எவ்வளவு தூரத்துக்கு ரோப் கார் வசதிகளை ஏற்படுத்த முடியும்?. அதற்கான சாத்தியக்கூறுகள் அங்கு இருக்கிறதா? என்பது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறைசார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏலகிரி மலையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது அதன் சாத்தியகூறுகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி சுற்றுலாத்துறை தொடங்கியுள்ளது. எத்தனை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப் கார் அமைக்கலாம்? இதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்த பிறகு அதன் முடிவு தெரியவரும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com