மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை: தொழிலாளி கைது

தூத்துக்குடியில் சரியாக வேலைக்குச் செல்லாமல், நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் வாலிபர் ஒருவர் தகராறு செய்து வந்துள்ளார்.
மகன் கொலை, தொழிலாளி கைது.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே மதுபோதையில் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்த மகனை தந்தையே அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் பெற்றோருடன் தகராறு

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகிலுள்ள ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 50), கூலி தொழிலாளி ஆவார். இவரது மகன் கருப்பசாமி(21), சரியாக வேலைக்குச் செல்லாமல், நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மகனை வெட்டிக்கொலை செய்த தந்தை

நேற்று இரவும் வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனின் தொடர் தொந்தரவால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தான் பெற்ற மகன் என்றும் பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துச் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கருப்பசாமி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார், கருப்பசாமியின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை மாரிமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com