

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியை சேர்ந்த மாரிமுத்து(எ) ஆனந்த் (வயது 46), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் மாரிமுத்து அய்யனடைப்பு பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு அங்குள்ள ஒரு விறகுகடை அருகே படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
நேற்று மாலை அவர் வழக்கமாக தூங்கும் விறகுகடை அருகே, தலையில் கல்லால் தாக்கியும், விறகு கட்டையால் அடித்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரூரல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அஞ்சித்நாயர், சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்துவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒன்றாக மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 நண்பர்களும் சேர்ந்து மாரிமுத்துவை கல்லாலும், விறகு கட்டையாலும் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.