5 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை - கடன் பிரச்சினையால் விபரீத முடிவு

கோப்புப்படம்
மனைவியிடம் பணம் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டியில் ரெயில் நிலையம் அருகே ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து ஆண் ஒருவரும், 5 வயது சிறுவன் ஒருவனும் நேற்று பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களுடன் அங்கு சென்று கிணற்றில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்த பர்சை திறந்து பார்த்ததில் இறந்து போனவர்கள் திருப்பூர் மாவட்டம் நல்லூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (37 வயது), அவரது மகன் கவின் (5 வயது) என்பது தெரியவந்தது.
பாலாஜி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். திருப்பூரில் தையல் தொழிலாளியாக 15 ஆண்டுகள் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் அவரது மனைவி சந்தியாவிடம் பணம் வாங்கி வருகிறேன் என கூறி விட்டு அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை செல்வதற்காக ரெயிலில் மகன் கவினுடன் ஏறினார்.
அவர்கள் ரெயிலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு இறங்கிய பாலாஜி ரெயில் நிலையம் அருகில் உள்ள கிணற்றில் தனது மகனை தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






