

தூத்துக்குடி,
திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் பிரசாந்த் (வயது 26), தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஆலையில் உள்ள பிளான்ட் பகுதியில் பிரசாந்த் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள 'ட்ரிப் போர்டில்' எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதில் பிரசாந்த் மீது மின்சாரம் பயங்கரமாகப் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.