கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் மின்மோட்டாரில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு கொடுக்கும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி.
Published on: 

சென்னை,

சென்னையில் கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

சென்னை கொடுங்கையூர் ஜம்புலிங்கம் தெருவில் வசித்து வந்தவர் குமார் (வயது 48). திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 4-வது மெயின் ரோடு, 15-வது கிழக்கு குறுக்குத் தெருவில் சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்து வந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

நேற்று மதியம் 3.30 மணி அளவில் மின்மோட்டாரில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து உடனிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X