

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் வைக்கோல் படப்பை பன்றி நாசம் செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை சரமாரி வெட்டி படுகொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி, கட்டளை பால்பண்ணை தெருவை சேர்ந்த முருகன் மகன் நடராஜன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். நடராஜன் தனது வீட்டில் பன்றிகள் வளர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பன்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பசாமி(26) என்பவருக்கு சொந்தமான இடத்தில் குட்டிகள் ஈன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கருப்பசாமி குடும்பத்தினருக்கும், நடராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில், நடராஜனின் பன்றி கருப்பசாமி வீட்டின் அருகில் உள்ள வைக்கோல் படப்பை நாசம் செய்தது தொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து நடராஜனின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நடராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனே நடராஜனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது, நடராஜன் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் அவரின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிஸ்வஜித் பாண்டா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்தில் தேவையான தடயங்களை சேகரித்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நடராஜன் பன்றிகளை வளர்த்து வந்ததும், அவரது பன்றி கருப்பசாமியின் வீட்டின் அருகிலிருந்த வைக்கோல் படப்பை நாசம் செய்து, அங்கிருந்த மண்ணைக் கிளறியதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு திடீர் ஆத்திரத்தில் ஏற்பட்டதாகவும், இருவருக்கும் இடையே இதற்கு முன்பு எவ்வித முன்விரோதமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் கருப்பசாமி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்றிகள் குட்டிகளை ஈன்றது, வைக்கோல் படப்பை நாசம் செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.