டி.வி.சேனல் மாற்றுவதில் தகராறு.. மனைவியை குத்திக் கொன்ற தொழிலாளி

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் கரிஞ்சான்கோடு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 56). இவருடைய மனைவி கஸ்தூரி (53). இந்த தம்பதிக்கு சரண்யா (27) என்ற மகளும், சச்சின்குமார் (26) என்ற மகனும் உள்ளனர்.
பழனி தனது மனைவியின் தங்கை கணவருடன் சேர்ந்து கோவில்களுக்கு நேர்ச்சை தொட்டில் மற்றும் ஓம குண்டத்திற்கான விறகுகள் தயாரிக்கும் மர வேலை தொழில் செய்தார். கஸ்தூரி நாகர்கோவிலில் உள்ள ஒரு கையுறை தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பழனிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மது போதையில் வீட்டுக்கு வரும்போது அவர், மனைவி கஸ்தூரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு கஸ்தூரியின் தம்பி ராஜேந்திரன் (45) வீட்டில் இருந்து கிரிக்கெட் பார்த்தார். இதனைத் தொடர்ந்து பழனி, டி.வி.யில் தனக்கு பிடித்த செய்தி சேனலை மாற்றி வைக்கும்படி கூற, அதற்கு ராஜேந்திரன் ஏதோ பதிலளிக்க, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்ட ராஜேந்திரன் அவசர, அவரசமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
தம்பி கோபத்துடன் வெளியேறியதை கவனித்த கஸ்தூரி, ஓடிச் சென்று அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினார். இது பழனிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான் சொல்வதை கேட்காமல் செல்லும் உனது தம்பிக்கு ஆதரவாக இருப்பது ஏன்?, இது சரியல்ல என பழனி, கஸ்தூரியை கண்டித்தார். பதிலுக்கு கஸ்தூரி, இப்படி பேசுவது சரிதானா? என கேட்டதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே பழனி சென்று விட்டார். திடீரென அவர் கத்தியை எடுத்து கஸ்தூரி இடுப்பில் குத்தினார். இதில் படுகாயமடைந்த கஸ்தூரி வலியால் அலறி துடித்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர், கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையே கஸ்தூரியை குத்தும் முயற்சியில் பழனி கீழே விழுந்தார். இதனால் அவரும் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுடைய மகன் சச்சின்குமாருக்கு கடந்த 24-ந் தேதி திருமணம் நடந்தது. மங்கள நிகழ்ச்சி நடந்த வீடு, 4 நாளில் துக்க வீடாக மாறியுள்ளது. இந்த கொலை தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. சேனல் மாற்றும் தகராறில் மனைவியை கணவர் குத்திக் கொன்ற சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






