கொரோனா நிவாரண உதவி கிடைக்காத தொழிலாளர்கள் தொழிலாளர் உதவி ஆணையரை அணுகி வங்கி கணக்கை அளிக்க வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரண உதவி கிடைக்காத கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட நல வாரிய உறுப்பினர்கள் தொழிலாளர் உதவி ஆணையரை அணுகி வங்கி கணக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நிவாரண உதவி கிடைக்காத தொழிலாளர்கள் தொழிலாளர் உதவி ஆணையரை அணுகி வங்கி கணக்கை அளிக்க வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் பதிவுபெற்ற 12 லட்சத்து 97 ஆயிரத்து 382 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.1,000 வழங்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ரூ.129.73 கோடி ஒதுக்கீடு செய்தது. 20.4.2020 வரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 427 தொழிலாளர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் இதர 14 நல வாரியங்களில் பதிவு பெற்ற 14 லட்சத்து 7 ஆயிரத்து 130 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து ரூ.140.71 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக நேற்று முதல் செலுத்தப்பட்டு வருகிறது. மேற்படி தொழிலாளர்களுக்கு 2-வது தவணையாக ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் 14 லட்சத்து 57 ஆயிரத்து 526 தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் அடங்கிய உணவு பொருட்களின் தொகுப்பு வழங்கிட, உணவு தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டதுஅதன்படி, 20.4.2020 வரை 5 லட்சத்து ஆயிரத்து 14 தொழிலாளர்களுக்கு இந்த உணவு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 336 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து 434 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 44 ஆயிரத்து 949 வெளிமாநில தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு உணவுப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரணத் தொகை கிடைக்க பெறாதவர்கள் தங்களது வங்கிக்கணக்கு எண்ணை, சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையரை(சமூக பாதுகாப்பு திட்டம்) அணுகி அளித்தால் விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com