

சென்னை,
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை
தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசு பஸ் ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு 2.57 மடங்காக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள னர். ஆனால் அரசு தரப்பில் 2.44 மடங்கு ஊதியம் தர சம்மதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த அரசு போக்கு வரத்து கழக தொழிற் சங்கத்தினர் நேற்று முன் தினம் முதல் பஸ்களை இயக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக சுமார் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பஸ் ஸ்டிரைக் இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக நீடித்தது.
அரசு ஊழியர்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் அவர்கள் பஸ் ஸ்டிரைக் பாதிப்பில் இருந்து தப்பினார்கள். என்றாலும் பொதுமக்கள் தங்களது அன்றாட பணி நிமித்தமாக வெளியில் செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று 3-வது நாளாக இந்த பாதிப்பு அதிகமாக இருந்தது.
நீண்ட தூர பஸ்கள் செல்லாததால் சனி, ஞாயிறு விடுமுறைக்கு சொந்த
ஊர்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பெரும்பாலான
பஸ்நிலையங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பஸ் போக்குவரத்தை எதிர்பார்த்து பல்லாயிரக் கணக்கானவர்கள் தவித்த படி இருந்தனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த
போராட்டத்துக்கு தடை விதித்தும், டிரைவர், கண்டக்டர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தர விட்டது. பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கோர்ட்டு எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசும் போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்கு
திரும்பும்படி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசு மற்றும் கோர்ட்டின் கோரிக்கைகளை ஏற்க அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மறுத்து விட்டன.
பணிக்குவராத தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை நோட்டீஸ்
அனுப்பியது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டு உள்ளது. நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தொழிலாளர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
#BusStrike | #TNBusStrike | #MRVijayabaskar