செயல் தலைவர் உதயநிதி, பொதுச் செயலாளர் டி.ஆர்.பாலு: அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தி.மு.க.!

தமிழக அரசியல் களம் விஜய் - உதயநிதி என்கிற வகையில் மாறிவிட்டது. த.வெ.க. அமைச்சரவையில் உள்ள பலரும் இளைஞர்களாக உள்ளதால், தி.மு.க.விலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 26 கட்சிகளுடன் பலம் வாய்ந்த கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆளுங்கட்சியான தி.மு.க. தோல்வியை சந்தித்தது. முக்கியமாக, தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

சட்டசபை தேர்தல் தோல்வியால் தி.மு.க.வில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளார். இனி 60 வயதிற்கு மேற்பட்டோர் முக்கிய பதவிகளில் இருக்கக்கூடாது என்று தி.மு.க. தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அடுத்து, அந்த இடத்திற்கு கட்சியின் பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல், கட்சியின் செயல் தலைவராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது:-

தமிழக அரசியல் களம் விஜய் - உதயநிதி என்கிற வகையில் மாறிவிட்டது. த.வெ.க. அமைச்சரவையில் உள்ள பலரும் இளைஞர்களாக உள்ளனர். அதனால், தி.மு.க.விலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. ஆட்சியில் இருந்தபோதே அவர் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஆட்சியிலும், கட்சியிலும் அவரின் செயல்பாடு குறைவாக இருந்தது. சட்டமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்து அவர் தேர்தலில் போட்டியிட்டார்.

டி.ஆர்.பாலு:

காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அவர் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்தார். உடல்நிலை ஒத்துழைக்க மறுப்பதால் துரைமுருகன் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துவிட்டார். இதை துரைமுருகனே தன்னுடைய ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். துரைமுருகன் பதவி விலகும் பட்சத்தில், தி.மு.க. பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com