உலக மகளிர் தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

உலக மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை,

உலக மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

உலக போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரிய சக்தியாக திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பா.ம.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையை வென்றெடுத்துத்தர வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமையாகும். அதற்காக போராட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:-

மகளிருக்கான பல்வேறு உரிமைகளை வலியுறுத்தி போராடி வெற்றிப்பெற்ற நாள் உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதன் மூலமே மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மகளிரின் உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாக சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெறமுடியும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்து செய்தியாக இருக்க முடியும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

மனித இனத்தை பாதுகாப்பது தாய்க்குலங்களே, அந்த தாய்க்குலங்களை போற்றும் வகையில் அவர்கள் நலன் கருதி கொண்டாடப்படுவதே உலக மகளிர் தினம் ஆகும். எனவே பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் என்றைக்கும் தே.மு.தி.க. இருக்கும். இந்த உலக மகளிர் தினத்தில் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

பெண் இனம் தான் குடும்பம் முதல் நாடு வரை முன்னேற அடித்தளமாக செயல்படுகிறது. மத்திய-மாநில அரசுகள் மகளிருக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பாதுகாப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

பெண்களின் பெருமையையும், தியாகத்தையும் போற்றும் வகையில் உலக மகளிர் நாள் கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மகளிருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களின் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com