

சென்னை,
ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ மலையில், தமிழக பெண் முத்தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை ஏற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.
தான்சானியா நாட்டில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் மிக உயர்ந்த பகுதியான 'உஹுரு சிகரத்தில்' (Uhuru Peak) கடந்த 8-ம் தேதி இந்த வரலாற்று சிறப்புமிக்க உலக சாதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. முத்தமிழ்ச்செல்வி தலைமையில் சென்ற 16 இந்திய மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழுவினர், கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரத்தில் 80 அடி நீளமும், 120 அடி அகலமும் (மொத்தம் 9,600 சதுர அடி) கொண்ட மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை விரித்து பறக்கவிட்டனர்.
ஒரே கொடி. ஒரே நோக்கம். போதைப்பொருள் இல்லாத இந்தியா” என்ற உன்னத இலக்கை உலகறிய செய்யும் நோக்கில் இந்த மலையேற்ற பயணம் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல், இந்திய மலையேற்ற குழுவினர் காட்டிய துணிச்சல், விடாமுயற்சி மற்றும் தேசபக்தி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த வரலாற்று சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு தருணம்!
"ஒரே கொடி. ஒரே லட்சியம். போதைப்பொருள் இல்லாத இந்தியா" என்ற ஊக்கமளிக்கும் முன்னெடுப்பின் கீழ், கிளிமஞ்சாரோ மலையின் உஹுரு சிகரத்தில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி (80 அடி × 120 அடி) ஏற்றப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.