ஜனநாயகனுக்கு விஜய் குரல் கொடுக்காததை வைத்தே அவரின் தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்: அமைச்சர் ரகுபதி

அமித்ஷா, மோடி அடுத்தடுத்து வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
ஜனநாயகனுக்கு விஜய் குரல் கொடுக்காததை வைத்தே அவரின் தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்: அமைச்சர் ரகுபதி
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்தது தான் தமிழ்நாடு, அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லிவிடுவார். மராட்டிய மாநிலத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பேசியது அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை.

எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணியை அமைக்கவும் முடியாது, பலப்படுத்தவும் முடியாது. எடப்பாடி பழனிசாமி புதிய கட்சி கூட்டணியில் இணையும் என்று கூறுகிறார். நிறைய லெட்டர்பேடு கட்சிகள் உருவாகின்றன. அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார்.

ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில், விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம். 1965-ம் ஆண்டு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர் பட்டாளம் துணிந்து எழுந்து போராட்டம் நடத்தியது. அப்போது இருந்த காங்கிரஸ் கட்சி வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு. காங்கிரஸ், தி.மு.க.வினருக்குள் எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளும் ஏற்படாது. அவர்கள் தங்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜனதா ஆட்சி காலத்தில் அதிகளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தமிழ்நாட்டிற்கு சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது. அமித்ஷா, மோடி அடுத்தடுத்து வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com