

திருவள்ளூர்,
பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய வடமாநில நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரும்புக்குப்பம் பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஒருவர், மாணவிகளை நோக்கி ஆபாச சைகை காட்டியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஆபாச சைகை காட்டியது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.தனது சகோதரி வீட்டிற்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.