வேன் மோதி இளம்பெண் பலி: பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் படுகாயம்

ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த சுமார் 15 பெண்கள் கன்னியாகுமரிக்கு பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டனர்.
வேன் மோதி இளம்பெண் பலி: பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் படுகாயம்
Published on

தூத்துக்குடி,

ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த சுமார் 15 பெண்கள், கன்னியாகுமரிக்கு பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு வேனில் ஏற்றி வந்ததோடு, 4 இருசக்கர வாகனங்களை உருட்டியபடி பாதயாத்திரை மேற்கொண்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கயத்தாறில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் தங்கிய இந்தக் குழுவினர், நேற்று அதிகாலையில் மீண்டும் பயணத்தைத் தொடங்கினர். கயத்தாறு நான்கு வழிச்சாலை இணையும் பகுதியில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கி பர்னிச்சர் பொருட்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்பாராத விதமாக பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இந்தக் கோர விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சு (வயது 27), சவுமியா(62), மஞ்சு(27) மற்றும் தீப்சி(52) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இவர்களது வேன் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இளம்பெண் சஞ்சு உயிரிழந்தார். மற்ற 3 பெண்களும் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com