மணலியில் குழந்தையுடன் அறையில் பூட்டப்பட்ட இளம்பெண்: போலீசார் பத்திரமாக மீட்டனர்

கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
மீட்பு
Published on: 

மணலி,

குழந்தையுடன் அறையில் வைத்து இளம்பெண்ணை கணவர் கதவை பூட்டிச் சென்றுவிட்டார். இது குறித்த வீடியோ வைரலானதால் போலீசார் தாய் மற்றும் குழந்தையை மீட்டனர்.

குடும்பத் தகராறு

சென்னை மணலி சி.பி.சி.எல். நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமணமாகி கணவர் மற்றும் 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் கணவன், மனைவி இடையே கடந்த ஆண்டுகளாக குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் இளம்பெண் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று இளம்பெண் மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு குழந்தையுடன் திரும்பினார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், குழந்தையுடன் அறைக்குள் சென்ற அவர் வெளியே வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு கணவர் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த இளம்பெண், அறைக்குள் குழந்தையுடன் பூட்டப்பட்டிருப்பது குறித்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.

போலீசார் மீட்டனர்

இதையடுத்து மணலி போலீசார் விரைந்து சென்று பூட்டை திறந்து தாயையும், குழந்தையையும் மீட்டனர். தொடர்ந்து கணவன், மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, இளம்பெண்ணின் சகோதரர். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்துவதாகவும், ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இளம்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X