இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 போலீஸ்காரர்கள் பணி நீக்கம்

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் இளம்பெண் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
திருவண்ணாமலை,
ஆந்திராவில் இருந்து தாயும், அவருடைய 18 வயது மகளும் தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு மினி லாரியில் திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை செல்லும் ரோட்டில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு மினி லாரி, திருவண்ணாமலையில் உள்ள ஏந்தல் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காய்கறி ஏற்றி வந்த மினி லாரி இவர்கள் ரோந்து வந்த இடத்துக்கு வந்தபோது 2 போலீஸ்காரர்களும் அந்த மினி லாரியை நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என கேட்டு மறித்தனர். அப்போது அதில் வந்த தாயும், மகளும் காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி ஏற்றிச்செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் போலீஸ்காரர்கள் அவர்களை கீழே இறங்கும்படி கூறினர்.
அப்போது தாயை மட்டும் விட்டுவிட்டு அவருடைய 18 வயது மகளை விசாரணை செய்ய வேண்டும் என கூறி தங்கள் மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண்ணின் தாயார் கூச்சலிட்டார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்ததும் 18 வயது பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு 2 போலீஸ்காரர்களும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்தப்பெண் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்த பெண், போலீஸ் சூப்பிரண்டிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இந்த நிலையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த போலீஸ் டி.ஐ.ஜி.தர்மராஜ் சம்பவம் நடந்த இடத்திலும், ஆஸ்பத்திரியிலும் விசாரணை மேற்கொண்டார்.
ரோந்து சென்ற போலீஸ்காரர்களே இளம்பெண்ணை அதுவும் தாயுடன் வந்தவரை அவரது கண்ணெதிரிலேயே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் 2 போலீசாரும் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.






