

சென்னை,
தமிழகத்தின் முழு நேர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முழு நேர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளம் மாநில கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் அவர் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான், தற்போது அவர் தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தின் முழு நேர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,
"தமிழ்நாட்டின்
முழுநேர ஆளுநராக
நியமிக்கப்பட்டிருக்கும்
மேதகு ராஜேந்திர விஸ்வநாத்
ஆர்லேகர் அவர்களுக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அரசியல் ஆட்சி என்ற
இரண்டு நிலைகளிலும்
அனுபவம் பெற்ற
ஆற்றலாளர் நீங்கள்
தமிழ்நாட்டின்
வாழ்வியல் விழுமியங்கள்;
பண்பாட்டுச் செழுமங்கள்;
இலக்கிய மரபுகள்;
அரசியல் அசைவுகள்
அனைத்தையும்
முற்றும் கற்றுக்கொண்டு
நேர்மையான நிர்வாகம்
வழங்க விழைகிறோம்;
வழங்குவீர்கள் என்றும்
நம்புகிறோம்
ஞானபீட விருதுக்கு
வாழ்த்துச் சொன்ன
தங்கள் பண்பாடு
இன்னும் என் நெஞ்சில்
ஈரமாக இருக்கிறது
மீண்டும்
ஆயிரம் வாழ்த்துக்கள்
ஆளுநர் அவர்களே!"
என்று தெரிவித்துள்ளார்.