

திருநெல்வேலி,
நெல்லை பெருமாள்புரம் தாமஸ் 4-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஜோசப்ராஜா (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரும் தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி(31) என்பவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலை முடிந்து திரும்பிய 2 பேரும், இரவு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஜோசப்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடசாமியிடம் வாங்கியிருந்த ரூ.7 ஆயிரம் கடனை திருப்பித் தருமாறு மாடசாமி கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த மாடசாமி, ஆத்திரத்தில் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜோசப்ராஜாவை தாக்கியுள்ளார்.
இதில் ஜோசப்ராஜா நிலைதடுமாறி கீழே விழுந்ததும், அவரது முகத்தில் கல்லால் மீண்டும் மீண்டும் தாக்கிச் சிதைத்துள்ளார். மேலும் அவரது கழுத்தை துண்டால் இறுக்கியும், காலால் மிதித்தும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார் என்பது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நள்ளிரவு 1 மணியளவில் புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திற்கு சென்ற மாடசாமி, தான் ஒருவரை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஜோசப்ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுக்கிடையே பணத் தகராறில் நடந்த இந்த விபரீத கொலை சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.