

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டத்திற்கு உட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக அங்கமைக்கப்பட்டுள்ள சோலார் சேனல்களில் விலை உயர்ந்த காப்பர் கேபிள்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த சோலார் சேனல்களில் பொருத்தப்பட்டுள்ள காப்பர் கேபிள்கள் தொடர்ந்து மர்மமான முறையில் திருடு போயின. இதையடுத்து அந்த நிறுவனத்தின் சார்பில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியாளர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்களான இசக்கிமுத்து, மாடசாமி ஆகிய 2 பேரும் சோலார் வளாகப் பகுதியில் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் சோலார் சேனல்களில் இருந்த காப்பர் வயர்களை துணிகரமாக வெட்டித் திருடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு ஊழியர்களைக் கண்டதும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும் உடனடியாக பாதுகாப்பு மேற்பார்வையாளர் கிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில், காப்பர் கேபிள் திருட்டில் ஈடுபட்ட கயத்தாறு இந்திராநகரைச் சேர்ந்த பாரதி என்பவரின் மகன் சின்னதுரை (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம் காப்பர் வயர்கள் எங்கு விற்கப்பட்டன என்பது குறித்தும், இந்தத் திருட்டில் தொடர்புடைய கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மேலும் சில கூட்டாளிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.