அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீசிய வாலிபர் கைது


அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீசிய வாலிபர் கைது
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 21 Jan 2025 12:43 AM IST (Updated: 21 Jan 2025 5:41 AM IST)
t-max-icont-min-icon

நடைமேடையில் நின்றிருந்த 2 வாலிபர்கள் திடீரென ரெயில் மீது கல் வீசிவிட்டு, அங்கிருந்து ஓடினர்.

நாகர்கோவில்,

பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுமுன்தினம் முடிவடைந்ததையடுத்து, சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் புறப்பட்டனர். இதனால் ரெயில்கள், பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் ரெயில்களுக்காக காத்திருந்தனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வந்ததும் அதில் இடம் பிடிக்க பலரும் போட்டி போட்டு ஏறினர். அப்போது நடைமேடையில் நின்றிருந்த 2 வாலிபர்கள் திடீரென ரெயில் மீது கல் வீசிவிட்டு, அங்கிருந்து ஓடினர். அச்சமயம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே போலீசார் அவர்களை பார்த்து பிடிக்க முயன்றனர்.

இதில் தப்பி ஓடிய 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட வாலிபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், நாகர்கோவில் பெரிய ராசிங்கன் தெருவை சேர்ந்த கணேஷ் (வயது 26) என்பதும், மது போதையில் கல் வீசியது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மற்றொரு வாலிபர் கோட்டாரை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய வெங்கடேசை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story