கோவில்பட்டியில் அரிவாளால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு: 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கோவில்பட்டி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அரிவாளால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தகராறு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30). கடந்த 23-ம் தேதி அன்று மாலை நேரத்தில், பாரதிநகர், அம்பேத்கர் மண்டபம் அருகே ஞானதிரவியத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டு; வாலிபர் படுகாயம்

வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஞானதிரவியத்தை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வாலிபர் உயிரிழப்பு; 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அந்த வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com