சாலையோரம் நின்ற தார் இயந்திரம் மீது பைக்குகள் மோதி இளைஞர் பலி: 2 பேர் படுகாயம்

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலையோரம் நின்ற தார் இயந்திரம் மீது பைக்குகள் மோதி இளைஞர் பலி: 2 பேர் படுகாயம்.
பிரவீன்
Published on: 

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கையுமின்றி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் ஊற்றும் இயந்திரத்தின் மீது அடுத்தடுத்து பைக்குகள் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தார் ஊற்றும் இயந்திரம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் வீட்டு மனைப் பிரிவிற்கு சாலை அமைக்கும் பணிக்காக தார் ஊற்றும் இயந்திர வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வாகனம் எதிர்பாராதவிதமாக பஞ்சர் ஆகியுள்ளது. இதனால், அந்த வாகனத்தை இயக்கி வந்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கை பலகையோ, ஒளிரும் விளக்குகளோ வைக்காமல், சாலையோரத்திலேயே ஆபத்தான முறையில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து மோதிய பைக்குகள்

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இப்பாதையில் பைக்கில் வந்த பிரவீன் (வயது 31) என்ற இளைஞர், இருட்டில் சாலையோரம் நின்ற தார் இயந்திர வாகனம் தெரியாததால் அதன் மீது பலத்த வேகத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே, அதே பாதையில் மற்றொரு பைக்கில் வந்த பிரசாத் (வயது 35) மற்றும் அவரது 5 வயது மகன் ஆகியோரும் இருட்டில் நின்ற அதே வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த கொடூர விபத்தில் பிரசாத் மற்றும் அவரது 5 வயது சிறுவன் ஆகிய இருவருக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த தந்தை மற்றும் மகனை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார், உயிரிழந்த பிரவீனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் ஆத்திரம்- விசாரணை

ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் வாகன உரிமையாளரின் அலட்சியமே இந்த விபத்திற்கும், ஒரு உயிர்பலிக்கும் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வாகன ஓட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X