கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு

கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்த வாலிபர் இன்று காலையில் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார்.
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம், தாமரைமொழியைச் சேர்ந்தவர் கந்தையா (வயது 48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரும், அரசப்பன் என்பவரின் மகனுமான சிவசூரியன்(34) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் சிவசூரியன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள சிவசூரியன் இன்று காலையில் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார். அங்கு போலீசார் அவரை மாலையில் வந்து கையெழுத்து போடுமாறு கூறியுள்ளனர். உடனே சிவசூரியன் அங்கிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே மோட்டார் சைக்கிளில் சிவசூரியன் அவரது அண்ணன் சின்னத்துரை(40) ஆகியோர் சென்றபோது, அங்கே காரில் வந்த ஒரு கும்பல் சிவசூரியன் பைக் மீது காரை மோதவிட்டுள்ளனர். அப்போது பைக்கில் இருந்து இறங்கி அருகில் இருந்த தோட்டத்திற்குள் சிவசூரியன் அவரது அண்ணன் சின்னத்துரை ஓடியுள்ளனர். பின் தொடர்ந்து விரட்டிய அந்த கும்பல் சிவசூரியனை சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மெஞ்ஞானபுரம் போலிசார் விரைந்து சென்று சிவசூரியன் உடலை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காயம் அடைந்த சின்னத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், ஏ.டி.எஸ்.பி. திபு, சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், "நேற்று ஜாமீனில் வந்த சிவசூரியன் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரை கொலை செய்தது கந்தையாவின் உறவினர்கள் என்றும்" தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் மெஞ்ஞானபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com