இளைஞர்களின் வேலை இல்லாதோர் விகிதம் 15.9 சதவீதமாக அதிகரிப்பு

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஜூன் மாதத்தில் 32.7 சதவீதமாக குறைந்துள்ளது.
இளைஞர்களின் வேலை இல்லாதோர் விகிதம் 15.9 சதவீதமாக அதிகரிப்பு
Published on

சென்னை,

நாட்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலை இல்லாதோர் விகிதம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும்.

வேலை இல்லாதோர் விகிதம்

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வேலை இல்லாதோர் விகிதம் 5 சதவீதமாக இருந்தது. தற்போது அது 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் இதே அளவான 5.4 சதவீதம் பதிவாகி இருந்தது. கிராமப்புறங்களில் வேலை இல்லாதோர் விகிதம் 4.3 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.6 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

பெண்கள்

பெண்களுக்கான வேலை இல்லாதோர் விகிதம் 5.3 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகவும், ஆண்களுக்கான விகிதம் 4.8 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் வேலை இல்லாதோர் விகிதம் 15 சதவீதத்தில் இருந்து 15.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற இளைஞர்களிடம் இது 13.5 சதவீதத்தில் இருந்து 14.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 18.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

இளம் பெண்களிடம் வேலை இல்லாதோர் விகிதம் 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது 17.7 சதவீதமாக இருந்தது. இதுவே இதுவரை பதிவான காலாண்டு புள்ளிவிவரங்களில் இளம் பெண்களுக்கான அதிகபட்ச வேலை இல்லாதோர் விகிதமாகும். வேலை செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை குறிக்கும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.5 சதவீதத்தில் இருந்து 54.6 சதவீதமாக குறைந்துள்ளது. பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஜூன் மாதத்தில் 32.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஒரு ஆண்டில் பதிவான குறைந்த அளவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com