ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு

ஏர்வாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்பாரற்று இருந்ததை அல்போன்ஸ் பார்த்துள்ளார்.
ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
Published on

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்த அல்போன்ஸ் (வயது 22) என்பவர் 3.6.2025 அன்று ஏர்வாடியில் உள்ள ஐ.ஓ.பி. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்பாரற்று இருந்ததை பார்த்துள்ளார். அவர் அந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் ஏர்வாடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஏர்வாடி காவல் துறையினர் விசாரித்தபோது, அந்த பணம் நம்பிநத்தலைவன்பட்டையம், கீழத் தெருவை சேர்ந்த இசக்கிரமேஷ்(31) என்பவருடையது என்று தெரியவந்தது. இதனையடுத்து இசக்கிரமேஷை ஏர்வாடி காவல் நிலையம் வரவழைத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுடலைகண்ணு, இசக்கிரமேஷ் தவறவிட்ட ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை உரிய முறையில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், அல்போன்ஸை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com