எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல - பிரவீன் சக்கரவர்த்தி

தி.மு.க. எதிர்க்கட்சியில் உட்கார வேண்டும் என்பதற்குதான் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர் என கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல - பிரவீன் சக்கரவர்த்தி
Published on

கோவை

எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல என காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வுக்கு, காங்கிரஸ், வி.சி.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில், அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இதற்கு அ.தி.மு.க. கடுமையாக கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.

பிரவீன் சக்கரவர்த்தி

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கோவையில் நிருபர்களிடம் கூறும்போது, த.வெ.க.-அ.தி.மு.க. இடையே இப்போது நடைபெறக்கூடிய பிரச்சினை குறித்து நாங்கள் பேசுவது சரியாக இருக்காது. எம்.எல்.ஏ.க்கள் சுயமாக முடிவெடுத்து வேறு கட்சிக்கு செல்கின்றனர். இது குதிரை பேரம் அல்ல.

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், த.வெ.க. எம்.எல்.ஏ.வை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு போட சொல்லியதாக வழக்கு போட்டு இருக்கின்றனர். பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரை பேரம். மாற்றம் வேண்டும் என்பதற்கும், தி.மு.க. எதிர்க்கட்சியில் உட்கார வேண்டும் என்பதற்கும்தான் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

இதற்கு ஏன் தி.மு.க. பயப்படுகிறது? எதிர்க்கட்சியில் அமர என்ன பயம்? எதை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம்? இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com