குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் - முதல்-அமைச்சர் வழங்கினார்

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற துறைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கினார்.
குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் - முதல்-அமைச்சர் வழங்கினார்
Published on

சென்னை,

2026 குடியரசு தின விழாவில் கலாசார நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் வெற்றி பெற்ற துறைகளுக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.2.2026) தலைமைச் செயலகத்தில், 2026 குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலாசார நிகழ்ச்சிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற துறைகளுக்கு கேடயங்களையும் வழங்கி சிறப்பித்தார்.

சென்னை, காமராசர் சாலையில் 26.1.2026 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், சென்னை, லேடி சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாம் பரிசும், தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளுக்கு மூன்றாம் பரிசும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் சென்னை, கொளத்தூர், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதல் பரிசும், சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு இரண்டாம் பரிசும், சென்னை, ராணிமேரி கல்லூரிக்கு மூன்றாம் பரிசும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து, குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கான முதல் பரிசிற்கான கேடயத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் வழங்கினார்.

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இரண்டாம் இடம்பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான கேடயத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகுவிடம் வழங்கினார்.

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் மூன்றாமிடம் பெற்ற காவல் துறைக்கான கேடயத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ.அருண் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) வீர் பிரதாப் சிங், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் வே.மணிகண்டன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com