பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்குதல்: கணவர் உள்பட 3 பேருக்கு 5 ஆண்டு சிறை

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் பகுதியில் ஒரு பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து கணவர் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
3 பேருக்கு சிறை தண்டனை.
Published on

தூத்துக்குடி,

பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்கிய வழக்கில், கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேருக்குத் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்குதல்

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 46) மனைவி குறியீஸ்வரி(35). இந்த நிலையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, முருகன் அவரது சகோதரர் சண்முகசுந்தரராஜ்(41) மற்றும் தாயார் (மாமியார்) பூச்சம்மாள்(75) ஆகியோர் சேர்ந்து குறியீஸ்வரியை வீட்டுக்குள் பூட்டி வைத்து தீவிரமாக தாக்கியுள்ளனர். இதில் குறியீஸ்வரி பலத்த காயமடைந்தார்.

3 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து குறியீஸ்வரி அளித்த புகாரின் பேரில், தருவைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் முருகன் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1-ல் நடைபெற்று வந்தது.

3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், சண்முகசுந்தரராஜ் மற்றும் பூச்சம்மாள் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 3 பேருக்கும் தலா 5 ஆண்டுக்ள சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com