

மும்பை,
சமீபத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வை எழுதிய 18 வயது மாணவர், வீடியோவை ஒன்றை பதிவு செய்து தனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ‘நீட் நுழைவுத் தேர்வு’ நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர்.
இதனிடையே, நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த விசாரணயில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.
வினாத்தாள் கசிந்த நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த மே 12-ந்தேதி தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து நீட் மறுதேர்வு கடந்த ஜூன் 21-ந்தேதி நடைபெற்றது. மொத்தம் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்த இந்த தேர்வை, 22.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
அந்த வகையில், மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியை சேர்ந்த சுஷில் தாகே என்ற மாணவரும் நீட் மறுதேர்வை எழுதியிருந்தார். ஆனால் தேர்வுக்கு பிறகு அவர் சோர்வுடன் காணப்பட்டு வந்துள்ளார். மறுதேர்வு சற்று கடினமாக இருந்தது என அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், மாணவர் சுஷில் தாகே, தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மாணவர் சுஷில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.. நான் எனது உயிரை எடுத்துக் கொள்ளப் போகிறேன். தயவு செய்து கவலைப்படாதீர்கள் அம்மா. அடுத்த பிறவியில் மீண்டும் உங்கள் மகனாக பிறப்பேன். ஆனால் இது போன்ற வலியை உங்களுக்கு தரமாட்டேன்.
என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கமாக பேசியுள்ளார். பின்னர் இந்த வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு, மாணவர் சுஷில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.