மு.க.ஸ்டாலினின் ஆட்சியை பொற்கால ஆட்சியாகவே மக்கள் கருதுகிறார்கள் - செல்வப்பெருந்தகை

தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் ஆட்சியை பொற்கால ஆட்சியாகவே மக்கள் கருதுகிறார்கள் - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது தமிழக மக்கள் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டியது மிகமிக அவசியமாகும். தமிழக அரசியல் மற்றும் தேசிய அளவிலான அரசியலையும் மனதில் வைத்துக் கொண்டு எந்த கூட்டணிக்கு வாக்களிப்பது என்பதை வாக்காளப் பெருமக்கள் மிக ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி செயல்பட்டதை எவரும் மறுக்க முடியாது. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த மொத்த வாக்குறுதிகளில் 505 இல் 400-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை புரிந்திருக்கிறார். மீதியுள்ள வாக்குறுதிகள் மத்திய பா.ஜ.க. அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்கிற ஒரு கருத்தியலை மு.க. ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக மத்தியத்தில் ஆட்சி செய்கிற பா.ஜ.க., தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வில் பாரபட்சம், புதிய கல்விக் கொள்கை என்கிற போர்வையில் மும்மொழி திணிப்பு, கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு திணிப்பு, வெள்ள நிவாரண நிதி புறக்கணிப்பு, மெட்ரோ ரயில் திட்ட புறக்கணிப்பு என வஞ்சிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்தளவிற்கு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய பா.ஜ.க. அரசு இதுவரை நடத்தியிருக்கிறது.

ஆனால், நிதிப் பகிர்வில் எத்தகைய அநீதிகள் இழைக்கப்பட்டாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு, மாநில அரசின் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிற மத்திய பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கிற அ.தி.மு.க., இதுவரை தமிழ்நாட்டின் உரிமைக்காக பேசியது கிடையாது.

இன்றைய அ.தி.மு.க. என்பது பா.ஜ.க.வின் ஊதுகுழலாக, கைப் பாவையாக, அடிமை கட்சியாக மாறி விட்டது. அ.தி.மு.க. என்ற முகமூடி அணிந்து கொண்டு பா.ஜ.க. தமிழ்நாட்டில் நுழைய முற்படுகிறது. அதனால் தான் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் நடைபெறுகிற தேர்தல் என்று பிரகடனம் செய்தனர். இதன்மூலம் பா.ஜ.க.வின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள அ.தி.மு.க. கூட்டணியை புறக்கணிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் முதல் ஜனநாயகக் கடமையாகும்.

கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளோ, முறைகேடுகளோ, சட்டம் ஒழுங்கு சீர்குலைவோ எதுவும் ஏற்படாமல் மாநில உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி வருகிற மு.க. ஸ்டாலின் அவர்கள், மாநிலம் கடந்து தேசிய அளவிலும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறார். கடந்த அ.தி.மு.க. ஆட்சி என்பது தமிழ்நாட்டின் இருண்ட காலம். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு சாத்தான்குளத்தில் தந்தை - மகன் லாக்கப்பில் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி, பாலியல் பலாத்காரத்திற்கு பொள்ளாச்சி, நிர்மலா தேவி விவகாரம் உள்ளிட்ட பட்டியலே சாட்சியாகும்.

எனவே, மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடர வாக்காளர்களுக்கு நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழச் செய்த பெருமை மு.க. ஸ்டாலினுக்கு உண்டு. அவரது ஆட்சி என்பது மகளிருக்கான விடியலாக அமைந்திருக்கிறது. கூட்டணி கட்சியினரை அரவணைத்துக் கொண்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்த மு.க. ஸ்டாலின் அவர்களது ஆட்சி ஒரு பொற்கால ஆட்சியாகவே மக்கள் கருதுகிறார்கள்.

இந்த அடிப்படையில் நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் தமிழ்நாட்டு மக்கள் தங்களது மேலான வாக்குகளை தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களித்து அமோக ஆதரவு வழங்கி மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்திற்கேற்ப உங்கள் நல்லாதரவினை வழங்க வேண்டுமென இருகரம் கூப்பி அன்போடு வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com