

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் இரண்டாவது நாளில் (திங்கட்கிழமை) மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. ஐந்தாம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று (21.2.2026) வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இதை முன்னிட்டு இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும், அனைத்து சார்நிலை கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும். மேலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி-கல்லூரி இறுதித்தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.