

சென்னை,
கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின். இவரது மனைவி லீமா ரோஸ். இவர் தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார்.
இதனிடையே, லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப்பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், 14 ஆண்டுகளாக ஐஜேகே கட்சியில் பணியாற்றியபோதும் கட்சியின் தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று கூறி அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
இந்நிலையில், லீமா ரோஸ் இன்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்.
முன்னதாக லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் - லீமா ரோஸ் தம்பதியின் மகன் ஜோஸ் மார்ட்டின் 2015ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.பின்னர் 2024ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய ஜோஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சியை புதுச்சேரியில் தொடங்கினார்.
ஆனாலும், தற்போது புதுச்சேரியில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் ஜோஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.