பெருந்துறை அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர் வெட்டிக்கொலை - தப்பி ஓடிய 5 பேருக்கு வலைவீச்சு

பெருந்துறை அருகே வடமாநில வாலிபரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
Published on

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயத்த ஆடை நிறுவனம் உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நரேந்திரு (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

அவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் பெகாரா, ரோதிகாந்த் பெகாரா, பொருபுல் பெகாரா, புராபாத்கான் பெகாரா, பிரதீப் நாயக் ஆகிய 5 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.

இந்தநிலையில் நரேந்திரு மற்ற 5 பேரிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக அவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் இ்ரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த நிரஞ்சன் பெகாரா, ரோதிகாந்த் பெகாரா, பொருபுல் பெகாரா, புராபாத்கான் பெகாரா, பிரதீப் நாயக் ஆகியோர் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து நரேந்திருவை உடலில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தார்.

உடனே 5 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நரேந்திருவை மீட்டு சிகிச்சக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நரேந்திரு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

பெருந்துறை அருகே வடமாநில வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com