சந்தையில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல்: அப்பாவி மக்கள் 30 பேர் கொன்று குவிப்பு

புர்கினா பாசோ நாட்டில் சந்தையில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி மக்கள் 30 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
Published on

குவாகாடவ்கவ்,

புர்கினோ பாசோ நாட்டில் உள்ள கால்நடை சந்தையில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, புர்கினா பாசோ ஆகும்.

இந்த நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இன குழுக்கள் இடையேயும் அவ்வப்போது அங்கு மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இங்கு நிலவி வருகிற வன்முறைக்கு முடிவு கட்ட பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர். இருப்பினும் வன்முறைக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி இடம் பெயர்ந்து விட்டனர்.

இந்த நிலையில் அங்கு கொம்பீங்கா என்ற இடத்தில் கால்நடை சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் அங்கு மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வந்து இறங்கினர்.

அவர்களை பார்த்ததும் அங்கிருந்த வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் பதற்றத்தில் உறைந்தனர். செய்வது அறியாது திகைத்து நின்றனர்.

ஆனால் மோட்டார் சைக்கிள்களை விட்டு இறங்கிய நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் காட்டுமிராண்டித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அங்கிருந்த அனைவரும் பதற்றத்தில் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர்.

சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள், பலரையும் ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பினர்.

இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் உள்ளூர்வாசிகள், இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.

இந்த தாக்குதல் நடந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தற்போது அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பயங்கரவாதிகள்தான் என அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதரவு பெற்ற புர்கினோ பாசாவின் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள்மீது அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மத அடிப்படையிலான பயங்கரவாதிகளுக்கு எதிராக அவ்வப்போது அரசாங்கம் வெற்றி பெற்றதாக கூறினாலும், புர்கினோ பாசோவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு இல்லாத நிலைதான் தொடருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் பெரும்பாலும் பள்ளிகளை குறி வைத்து தாக்குதல்கள் நடத்துவதாகவும், இதனால் 3 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com