விசைத்தறி உரிமையாளர்களிடம் ரூ.19¾ லட்சத்துக்கு ஜவுளிகள் வாங்கி மோசடி - ஒருவர் கைது

விசைத்தறி உரிமையாளர்களிடம் ரூ.19¾ லட்சத்துக்கு ஜவுளிகள் வாங்கி மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Published on

ஈரோடு,

ஈரோடு வில்லரசம்பட்டி இலையம் நகரை சேர்ந்தவர் பிரியவர்சினி (வயது 29). இவர் தனது கணவருடன் சேர்ந்து அதே பகுதியில் விசைத்தறி மூலம் ரயான் துணிகளை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஈரோட்டை சேர்ந்த அருண், மணிசுரேஷ், செல்வம், குமார் ஆகிய 4 பேர் இவரது விசைத்தறி கூடத்திற்கு வந்து, நாங்கள் ஈரோடு திண்டல், கே.ஏ.எஸ். நகர் பகுதியில் சொந்தமாக டெக்ஸ் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறோம். தங்கள் நிறுவனத்திற்கு ரயான் துணிகள் வாங்க வந்து இருக்கிறோம். துணிகளை அனுப்பி வைத்தால் உடனடியாக பணம் தந்துவிடுவோம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதை நம்பிய பிரியவர்சினி ரூ.7 லட்சத்து 32 ஆயிரத்து 917 மதிப்பிலான ஜவுளிகளை அவர்கள் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அதே நபர்கள் பிரியவர்சினியை தொடர்பு கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ரயான் துணிகளை அனுப்பி வையுங்கள். மொத்தமாக பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறி உள்ளனர்.

அதனால் பிரியவர்சினி மீண்டும் ரூ.7 லட்சத்து 39 ஆயிரத்து 197 மதிப்பிலான ரயான் துணிகளை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பிரியவர்சினி அவர்கள் கூறிய முகவரிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு யாரும் இல்லாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் 4 பேரும் சேர்ந்து தன்னிடம் ஜவுளிகள் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பிரியவர்சினி இதுபற்றி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மேற்கண்ட 4 பேரும், பிரியவர்சினியிடம் ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்து 114 மதிப்பிலான ஜவுளிகளையும், சித்தோடு குமிலன்பரப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகரனிடம் ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 48 மதிப்பிலான ஜவுளிகளையும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 78 ஆயிரத்து 162 மதிப்பிலான ஜவுளிகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிசுரேஷ், செல்வம், குமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com