முடிசூட்டு விழாவிற்கு முன் பாதுகாவலராக இருந்த பெண்ணை திருமணம் செய்த தாய்லாந்து மன்னர்

முடிசூட்டு விழாவிற்கு சில தினங்களே உள்ள நிலையில், தனது பாதுகாவலராக இருந்த பெண்ணை தாய்லாந்து மன்னர் திருமணம் செய்து கொண்டார்.
Published on

பாங்காங்,

தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன் (66) பொறுப்பேற்றார். இவரை ரமா எக்ஸ் என்றே அழைக்கின்றனர். இவர் வரும் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வ மன்னராக முடிசூடி அறியணை ஏறவுள்ளார்.

இந்த நிலையில், முடிசூட்டு விழாவிற்கு சில தினங்களே உள்ள நிலையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பு குழுவின் துணை தலைவராக இருந்த சுதிடா என்பவரை மணமுடித்துள்ளார். திருமண விழாவில், தாய்லாந்தின் ராணுவ ஆட்சியாளரான பிராயுத் சான் ஒச்சா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

திருமணம் நடைபெற்றதன் வீடியோ காட்சிகள் தாய்லாந்து நாட்டு ஊடகங்களில் நேற்று ஒளிபரப்பானது. சுதிடாவை தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ ராணியாகவும் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே, மூன்று முறை திருமணமான மன்னர் வஜிரலங்கொன், மூன்று முறை விவாகரத்து செய்து கொண்டார். அவருக்கு 7 பிள்ளைகள் உள்ளனர்.

ராணியாக அறிவிக்கப்பட்டுள்ள சுதிடா ஏற்கனவே தாய் ஏர்வேஸில் விமான உதவியாளராக பணிபுரிந்தவராவார். கடந்த 2014 ஆம் ஆண்டு தனது பாதுகாப்பு குழுவின் துணை கமாண்டராக சுதிடாவை மன்னர் அறிவித்தார். அப்போதே, தாய்லாந்து ஊடகங்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாக பல நாட்களாக கூறி வந்தன. ஆனால் மன்னர் தரப்பில் இந்த செய்திகள் தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com