வங்கியில் நகைகள் மாயமான வழக்கில் 140 வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கியது

புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் நகைகள் மாயமான வழக்கில், 140 வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கி இன்று வரை நடைபெற உள்ளது.
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியை சேர்ந்த மாரிமுத்து கடந்த ஏப்ரல் 28-ந் தேதி காணாமல் போனதாக அவரது மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 29-ந் தேதி காலை புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் மாரிமுத்துவின் கார் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் கிலோ கணக்கில் கவரிங் வளையல்களும், ஹார்டு டிஸ்க்கும் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பணம் மற்றும் நகைகளுடன் மாரிமுத்து மாயமாகி இருக்கலாம் என்ற சந்தேகம் வங்கி நிர்வாகத்திற்கு எழுந்தது. இதனையடுத்து வங்கி நிர்வாகத்தினர் நகைகள் மற்றும் பணத்தை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.4 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

13.75 கிலோ நகை காணவில்லை

இந்நிலையில் காணாமல் போன மாரிமுத்து கடந்த மே 3-ந் தேதி மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து மாரிமுத்துவின் மனைவி ராணியுடன் சென்ற போலீசார் மாரிமுத்து தானா என்று உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையில் பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட 13.75 கிலோ நகை காணவில்லை. எனவே வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த மாரிமுத்து நகைகளை எடுத்து இருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனக்கூறி புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாரிமுத்து பல்வேறு தனியார் நிதிநிறுவனங்களில் 4 கிலோ வரை அவரது பெயரிலும், அவரது உறவினர்கள் பெயரிலும் நகை அடகு வைத்து இருந்தது தெரிய வந்தது.

இழப்பீடு

இந்நிலையில் வங்கியில் மாயமான நகைக்கு பதிலாக பணமோ அல்லது நகையோ வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி வங்கியில் மாயமானதாக கூறப்பட்ட 140 வாடிக்கையாளர்களின் 13.75 கிலோ தங்க நகைகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் களுக்கு இழப்பீடு தொகை நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி இன்று (வியாழக்கிழமை) வரை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து வங்கி நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகள் அடகு வைத்ததற்கான அட்டையை கொண்டுவந்து, வங்கியில் கொடுத்து, தங்களது நகைக்கு பதிலாக இழப்பீட்டிற்கான பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்து விட்டு செல்கின்றனர். இதையொட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், காணாமல் போன அடகு நகைக்கு பதிலாக ஒரு கிராமிற்கு ரூ.3 ஆயிரத்து 600-ம், சேதாரமும், ஜி.எஸ்.டி. தொகையும் வழங்கப்படுவதாக வங்கி நிர்வாகம் கூறி உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com